இளைய தமிழா

தை தை என்றே நீ ஆடு
தமிழா மகிழ்ந்து கொண்டாடு ;
ஈரம் வீரம் நம்’ பண்பாடு
இழந்ததை மீட்டோம் பண் பாடு …
இதுவரை வந்தது எத்தனை தை?
இத்தை தைத்தது இதயத்தை …..
கப்பிக்கிடந்த வருத்தத்தை
களத்தில் துடைத்து வந்த தை
காலம் வரைந்த கடிதத்தை
கண்டு தந்தது இந்த தை!
ஞாலம் வியக்கும் மாற்றத்தை
தந்து பார்வையை மாற்றும் தை
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அதற்கொரு குணமுண்டு
வார்த்தையில் கண்ட முழக்கத்தை
வாழ்க்கையில் கொண்டு வந்த தை
அலைகள் புரளும் மெரினாவில்
இளம் தலைகள் திரண்ட வரலாறு
கலைகள் உரிமைகள் மீட்டெடுக்க
களத்தில் குதித்தது காட்டாறு
சத்தியம் வென்ற சமரினிலே
சமமாய் கைகள் கோர்த்தவர்கள்
மூவாயிரம் ஆண்டு மூத்தவர்கள்
முத்தமிழ் பெருமைகள் காத்தவர்கள்!
வலையில் புழங்கிய இளையபடை
வந்ததும் தகர்ந்தது வந்த தடை
இளையதமிழா என் வணக்கம்
இனியும் செயல்படு மண் மணக்கும் !.