சிங்கப்பல் தெரியச் சிரித்தபடி

சிங்கப்பல் தெரியச் சிரித்தபடி
“வாங்க மாமா” என்றான் பாலு

கூட்டும் பணியைப் பாதியில் நிறுத்தி
“வீட்டில் நலமா” என்றாள் திவ்யா

“காப்பி சாப்பிடுங்கண்ணே:
ஈரம் சொட்டும் தலையுடன்
டம்ளரை நீட்டினாள்
நண்பனின் மனைவி

“இந்த நாள் இனிய நாள்” என்று
தொலைக்காட்சியில்
சொல்லிக் கொண்டிருந்தார் தென்கச்சி

“சொல்லுங்கண்ணே”
நண்பன் மனைவி என்னைப் பார்க்க
டூருக்குப் போன அவள் புருசன்
ஆக்சிடென்ட்டில் செத்ததாய்ப்
போன் வந்ததை
எப்படிச் சொல்ல அவளிடம்?