நில் கவனி செல்

அது உன் வாகனம் தானே

ஏன் எமனின் வாகனம் போல் இயக்குகிறாய்?

வரிசையில் நிற்கும் வண்டிகள் தாண்டி

இண்டு இடுக்குகளில் முண்டியடித்து

சாகச பயணம் செய்யத் துடிக்கிறாய்.

அது சாக பயணமாய் ஆவது நன்றா?

எதிர்வரும் வண்டிகள் குறித்து கவலையில்லை

திரும்பும் திசை குறித்து தெளிவில்லை

விதிகளெல்லாம் மீறுவதற்கென்றே

விளங்கிக் கொள்கிறாய்

தெரிந்து கொள்

விபத்துக்கு ஒரு விண்ணப்பம் போடுகிறாய்

குடித்துவிட்டு வண்டி ஓட்டி

இடித்துவிட்டு வீழிக்கிறாய்

செல் பேசியபடி செல்கிறாய்

இன்கம்மிங் இலவசமாய் இருக்கலாம்

அவுட்கோயிங்கிற்கு அவசரம் ஏன்?

சாலை பயணம் முக்கியம் தான்

அதை விட முக்கியம் நாளைய பயணம்

எதிலும் அவசரம் தவிர்

வாழ்க்கை ஒரு தேநீர் கோப்பை

ஒவ்வொரு சொட்டாய் உறிஞ்சி ரசி

ஒரு கதை தெரியுமா?

கண்ணதாசன் ஒரு முறை

மலேசியா போனார்

இலக்கிய கூட்டத்திற்கு நேரமாகிவிட்டதென

இயக்கிய டிரைவர் விரைந்து பறந்தார்

சிரித்தப்படியே கவிஞர் சொன்னார்

இந்த கூட்டத்திற்கு

பத்து நிமிடம் தாமதமாய் போகலாம்

ஆனால் பத்து வருடம் முன்போ போய் விடக்கூடாது

இனியேனும் விழி

சாலை விதிகள் மதி

வண்டி பயணம் மட்டுமல்ல

வாழ்க்கை பயணமும் சுகமாகட்டும்!