கவிஞர் ஜீவி

யார் இவன்?

நானோர் ரசிகன்
நல்லன செய்பவன்
ஊர் தோரும் சுற்றி
உறவுகள் வளர்ப்பவன்

பார்வையை விரிப்பவன்
வேர்வையை மதிப்பவன்
தீர்வை நோக்கிய
திசையில் நடப்பவன்

எடுத்த காரியம்
முடித்திட முயல்வேன்
அடுத்தவர்க்குதவிட
ஆர்வமாய் அலைவேன்

அழகாய் ஆடைகள்
அணிய பிடிக்கும்
அறிவுச் செய்திகள்
அலசப் பிடிக்கும்
புத்தக வாசனை
பிடிக்கப் பிடிக்கும்
வித்தக கவிதைகள்
வடிக்கப் பிடிக்கும்
நேச மழையில்
நனையப் பிடிக்கும்
நேர்த்தியாய் எதையும்
செய்யப் பிடிக்கும்
நகைச்சுவை வெடிகள்
வெடிக்கப் பிடிக்கும
பொய்கள் குறைத்து
பூக்க பிடிக்கும்
சின்னச் சின்ன
சாரல் பிடிக்கும்
சிரித்தப்படியே
வாழப் பிடிக்கும்
வெற்றியின் பாடம்
தோல்வியின் ஞானம்
இரண்டும் சமமாய்
ஏற்கப் பிடிக்கும்
கைகள் குலுக்கி
கலைந்து விடாமல்
மனசுகள் குலுக்கி
மகிழ பிடிக்கும்
நானோர் ரசிகன்
நல்லன செய்பவன்.

– ஜீ.வி.

வாழ்வதற்கே போராட்டம்

தலைமேல குட்டு வச்சா
தாங்கிகிட்டு வாழ்ந்திடலாம்
அடிமடியில் இடிவிழுந்தா
ஆருதான் பொறுப்பாக?

உச்சத்த தொட்ட கிளி
உசுரவிட்டது ஏன்?
சிறகுகள கருக்கிகிட்டு
சிதிலமாகி போனது ஏன்?

கனாகண்ட வானம் ஒண்ணு
கைகூடவில்லையிண்ணு
பொண்ணொருத்தி நொந்த கதை
பொன்கருத்து போன கதை

பரிட்சையில பெயிலாகி
பலபேரு செத்ததுண்டு
ஜெயிச்ச பொண்ணு மரிச்ச கதை
ஜெகத்துல கண்டதுண்டா?

அறிவாலே ஜெயிச்சவதான்
அரியலூரு ராசாத்தி
ஆதரிச்சி வச்சோமா
அவ உயிரை காப்பாத்தி

ஆத்துல சுழல் வந்து
அழிச்ச கதை கேட்டிருக்கோ
ஸ்டெத்துல கைநீண்டு
டெத்தாக்கி விட்டுடுச்சே?

நீட்டு என்றும் கோர்ட் என்றும்
நீட்டி முழக்கினாங்க
கட்டையில உடல் போச்சு
காப்பாத்த யாருமில்ல

பாதகத்தி சாவினிலே
பாடம் நாம் கத்துக்குவோம்
இனி புதிதாய் அனிதாக்கள்
இல்லாமல் பாத்துக்குவோம்

தற்கொலையால் தீர்வு இல்ல
தத்துவத்த ஒத்துக்குவோம்
வாழ்வதற்கே போராட்டம்
வரும் காலம் வழிகாட்டும்

அக்கினியில் மொட்டுகள
அழிச்ச கதை போதுமய்யா
உக்கிரம் கொண்டு எழுந்தால்
அக்கிரமம் தீருமையா

மேகம் மறைத்த நிலவு

வாரத்தின் வசீகரமான நாள் வெள்ளிக் கிழமை தான் எங்கள் வீட்டில் விடியலில் அம்மா எழுந்து ஜொலிக்கும் நிலவென மஞ்சள் பூசிய முகம் சுடர, ஈரம் சொட்டும் தலையுடன், தூபக் கரண்டியைக் கைகளில் ஏந்தி, ஒவ்வொரு அறைக்காய் சாம்பிராணி புகை போடுவாள். அவள் கடந்து போன வெகு நேரம் பின்னரும் அறையைச் சுற்றி சுற்றி வரும் அந்த வாசம். ஒரு நல்ல கவிதையும் அப்படித் தான். படித்து வெகு நாளான பின்னும் மனசை சுற்றி சுற்றி வரும். அப்படி வாசிப்பரை வசீகரிக்கிற பல கவிதைகளைத் தந்தவர் தான் புதுச்சேரியைச் சார்ந்த விஜயரங்கம் என்கிற தமிழ் ஒளி. 21.09.1924 குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள ஆடூர் கிராமத்தில் சின்னையா செங்கேணியம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர். பட்டு ராசு என்ற செல்லப் பெயர் கொண்ட அவர் தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாடும் பாட்டு ராசுவாக பரிணமித்தார். புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளி, கல்வே கலாசாலை போன்றவற்றில் ஆரம்ப கால கல்வி பயின்றவர். பாரதிதாசனின் மகனான மன்னர் மன்னனோடு இணைந்து கையெழுத்து பத்திரிக்கை நடத்தி பாரதிதாசனின் மனம் கவர்ந்த சீடராய் மாறி, அவரின் சிபாரிசில் கரந்தை தமிழ் சங்கத்தில் முறையாக தமிழ் பயின்றவர். தமிழ் மொழியின் கவிதையழகும் நுட்பமும் உள்வாங்க அந்த அனுபவம் அவருக்கு பயன்பட்டது. பாரதியை தனது ஞானத் தந்தையாக வரித்துக் கொண்டவர். பாரதிதாசனின் அரவணைப்பில் பதியம் போடப்பட்டவர். அவரின் உதவியாளராகவும் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார்.

பாரதி, பாரதிதாசன் கவி மரபில் முற்போக்கு சிந்தனைகளை அழகான சொற்செட்டுகளில் அள்ளித் தந்த தமிழ் ஒளியின் பெரும்பாலான கவிதைகள் களுக்கென சிரித்து கவரும் குழந்தை போல

“பச்சைப் பசுந்தழைக் காட்டிலே – இலை மேட்டிலே
தைச்சுக் கிடந்தது புன்னகை – மழை மென்னகை!”
என்று இயல்பான சந்தத்தில் அமைந்து வாசிப்பவரின் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளக்கூடியவை.

ஜன சக்தி, தாமரை, அமுதசுரபி, முன்னணி போன்ற இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகி கவனம் பெற்றிருக்கின்றன. மாதவி காவியம், புத்தர் பிறந்தார், கோசலை குமாரி, வீராயி, நிலை பெற்ற சிலை, மே தின ரோஜா ஆகிய படைப்பிலக்கியங்களையும், விதியோ வீணையோ என்ற இலக்கிய நாடகத்தையும், விமர்சனப் பகுதிகள் மற்றும் தனிக் கவிதைகளையும் தமிழ் ஒளி தமிழ் இலக்கிய கணக்கில் தம் பங்காக வரவு வைத்துள்ளார். கவிதை படைப்பதோடு நின்று விடாமல், இயக்கமாகவும் இயங்கவேண்டும் என்ற புரிதலோடு, 16.08.1952ல் நாரண துரைக்கண்ணன் தலைமையில் செயல்பட்ட சென்னை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகக் குழுவிலும் இடம் பெற்று தடம் பதித்துள்ளார்.

ஆரம்பத்தில் திராவிட இயக்கத்திலும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டு எழுதி வந்த தமிழ் ஒளியின் கடைசி நாட்கள் கடுமையான ஆஸ்துமாவின் வாதை, கையில் காசில்லாததால் ஒவ்வொரு நொடியையும் அடுத்தவரைச் சார்ந்து இயங்க வேண்டிய அவலம், காதலித்த பெண்ணை கரம் பிடிக்க முடியாமல் போன நிராசை, தான் உயிருக்கும் மேலாக கருதிய இயக்கம் தனக்கு உரிய மதிப்பு தராமல் புறக்கணித்ததால் எழுந்த கோபம் என கலவை உணர்ச்சியால் நிரம்பியிருந்திக்கின்றன. மணக்கும் தமிழ் கவிதைகளை சரமழையென கொட்டும் ஆற்றலை கைவரப்பெற்றிருந்த கவிஞன் தனது கடைசி நாட்களில் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகி நாற்பது வயது நெருங்குவதற்குள் மறைந்திருக்கிறார் என்ற செய்தி கையில் கிடைத்த தங்க நாணயத்தை சாக்கடைக்குள் போடும் கிறுக்கனாக இந்த சமூகம் இருப்பதை உணர்த்தி மனதை அதிரவைக்கிறது.

பாரதி, பாரதிதாசன் போல் இலக்கிய உலகில் பரவலாக பேசப்படக்கூடிய தகுதியிருந்தும் மேகம் மறைத்த நிலவாக இவரது வாழ்க்கை முடிந்து போயிருக்கிறது.

“இப்ப, எல்லாமே சினிமாப்பாட்டுத்தான் பெரும்பாட்டாப்போச்சு. நானும் சினிமாவுக்குப் பாட்டெழுதி பணம் சேர்த்திருந்தால் என்னையும் பாராட்டி மலர் போட்டிருப்பார்கள். அந்த வழிக்கு நான் போகவில்லை. எண்ணங்களை இலக்கியத்தில் பதிவு செய்தேன். அது விழலுக்குப் பாய்ச்சிய நீராகிவிட்டது” என்ற தமிழ் ஒளியின் வரிகளை வாசிக்கும்போது இருட்டை விரட்டுகின்ற அகல் விளக்குகளை புறக்கணித்துவிட்டு சீரியல் செட்டுகளின் பின்னால் அலைகிற இந்த சமூகத்தின் தலையில் நறுக்கென்று குட்டு வைக்கவேண்டும் போல் தோன்றுகிறது. எனினும் பாலையில் கிடைத்த அருஞ்சுணையாய் தமிழ் ஒளியின் உற்ற தோழர் செ.து.சஞ்சீவி அவருக்கு பல வகைகளிலும் உதவியது மட்டுமல்லாமல் அவரது கவிதைகளைத் தொகுத்து தமிழ் இலக்கிய உலகுக்கு உதவியிருப்பது ஆறுதல் தருகிறது.

திறமையாளர்களைக் கொண்டாட வேண்டிய ஒரு சமூகம் அதை செய்ய மறுப்பதோடு நில்லாமல் படைப்பாளியின் மனதை காயப்படுத்தும் வேலைகளில் இடைவிடாமல் ஈடுப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. சாதி, வர்க்கம் போன்ற ஸ்கேலால் அவரை அளந்து, உயரத்தைக் குறைத்து மதிப்பிடும் அழுக்கு மனிதர்களை தமது ஜொலிக்கும் வரிகளால் சந்திப்பவராக தமிழ் ஒளி இருந்திருப்பது வியப்பு தருகிறது.

“கத்தி முனைதனிலே – பயங்
காட்டும் உலகினிலே
சத்திய பேரிகையை – நான்
தட்டி முழக்கிடுவேன்”
என அவரது வரிகள் திரிகளாகி நமது சிந்தனையை பற்ற வைக்கின்றன.

உழைத்து களைத்த தோழர்களின் உதிரத்தில் பூத்த மே தினம் பற்றி முதல் முதலில் எழுதிய கவிஞன் தமிழ் ஒளி தான் என்பது வரலாற்று நிஜம். கருப்பு சிவப்பில் கால் பதித்து கடைசியில் செம்மண் வீதியில் வந்து நின்ற தமிழ் ஒளியின் மே தனக் கவிதை
“கோழிக்கு முன் எழுந்து
கொத்தடிமை போல் உழைத்து
பாடுப்பட்ட ஏழை முகம்
பார்த்து பதைபதைத்து
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!
மே தினமே நீ வருக!
என விரிந்து வெளிச்சம் பாய்ச்சுகிறது.

முறையாக தமிழ் கற்று மரபில் தோய்ந்து கவிதை எழுதினாலும் தமிழ் ஒளியின் பார்வை தனித்து விளங்கி வாசிப்பவரிடம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
“நெற்றித் திலகம் நிலம்பெற் றெழுந்தது போல்
சுற்றித் திரிந்து சுடர்கின்ற பொன்விக்கு!”
என மின்மினி பற்றிய அவரது கவிதை மின் துண்டுகளாய் அவதாரம் கொள்கின்றன.

தமது கவிதைகளின் உருவமும் உள்ளடக்கமும் சிறப்பாகவும் முற்போக்காகவும் அமையவேண்டுமென்று உழைப்பின் வெற்றியோடு எழுதிய கவிஞர் தமிழ் ஒளி பண்டை தமிழ் இலக்கியங்களிலும் இன்றைய புதுமை இலக்கியங்களிலும் அளவற்ற ஈடுபாடு கொண்ட இலக்கிய ரசிகர் என்று தி.க.சி சொல்வது சரிதான்.
“சொல்லால் ஏதும்
சொல்ல வொணாத
சோதியின் சாரமிது!
எல்லா உலகும்
புகழும் மும்தாஜ்
ஏற்றிய தீபமிது!”
என்று பளிங்கு கற்களால் கட்டிய தாஜ்மகால் குறித்து தனது வித்தியாசமான பார்வையைத் தேர்ந்தெடுத்த சொற்களால் விளக்கி வைக்கிறார்.

ஏராளமான கவிதைகளை இவர் எழுதியிருந்தாலும் கண்ணப்பன் கிளிகள் என்ற இவரது படைப்பு சொந்த சோகத்தை சொல்லியது என கி.வா.ஜா. சொல்கிறார்.
“தத்தையம்மா தத்தையம்மா
ஓடிச் சென்றாயோ – உடல்
முத்தையம்மா முத்தையம்மா
தேடிச் சென்றாயோ?
பச்சையம்மா பச்சையம்மா
பாடிச் சென்றாயோ – என்
இச்சையம்மா இச்சையம்மா
கூடிச் சென்றாயோ?”
போன்ற வரிகள் உள் மனசின் ஒப்பாரியாய் நம் மீது ஈரப் பிசுப்பிசுப்பை ஒட்டிவிட்டு செல்கின்றன.

வார்த்தைகளைத் தேடி கவிஞன் க~;டப்படக் கூடாது. அவைகள் வரிசையாய் அணிவகுத்து கவிஞனின் கடைக்கண் பார்வைக்காய் காத்திருக்க வேண்டும். எதுகை மோனைக்காய் வலிய சொல்லப்படும் வார்த்தைகளைவிட உணர்வுகளைச் சுமந்து வரும் உயிர் கூடுகளாய் கவிஞனின் வார்த்தைகள் கவனம் பெற வேண்டும்.
“சுவர்க் கோழிகள் இடுமோர் ஒலி
தொலையாப் பெரும்ஓலம்!
சுவர் ஓதமும் தரையீரமும்
தொல்லைக்கிட மாகக்
கவலைப்படும் எளியோர் குடில்
கண்ணீர்விடும் சோகம்!
அவலச்சுவை மிகும் சூழ்நிலை
அமையும் அது நேரம்!”
மழைக்காலம் பற்றிய தமிழ் ஒளியின் கவிதையில் வார்த்தைகளே குரலாகி சோகம் சொல்கின்றன.

அழகின் கூர்மையுடன் கருத்து வெளிச்சம் தெறிக்கும் கவிதைகளை எழுதிய கவிஞர் தமிழ் ஒளி போதுமான அளவிற்கு புரிந்து கொள்ப்படாத கவிஞராகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். சஞ்சீவி கவிதைகளை வெளியிட, புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம், புதுவை அரசு போன்றவை சமீப காலத்தில் தமது தோள்களில் தூக்கி அவரது கவிதைகளைச் சுமப்பதும் பரவலாக்குவதும் பாராட்டுக்குரியது. அதிலும் முற்போக்கு முகாமிலிக்கும் கவிஞர்களை மற்றவர்கள் ஒதுக்கும்போது இயக்கத்தின் கரங்கள் தழுவிக் கொள்ளவேண்டும் என்பதை தமிழ் ஒளியின் வாழ்வு விளக்குவதாக உணரமுடிகிறது. எனினும் கவிஞர் தமிழ் ஒளி தமிழ் வானத்தில் விளங்கிய ஓர் விண்மீன். அதன் மங்காத ஒளியை போற்றுவோமாக என்கிறார் தமிழறிஞர் டாக்டர்.மூ.வரதராசன். தமிழ் கவிதை ரசிகர்கள் அதை தட்டாமல் செய்யவேண்டும்.

தமிழா! தமிழா!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற
பூங்குன்றனின் பேரனே!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்று பேசியவனின் வாரிசே!
எது தேர்வாய் நீ?
வெட்டும் கத்தரிக்கோல்
இணைக்கும் ஊசி
எது வரைவாய் உன் திரையில்?
வசீகரிக்கும் வானவில்
வடியும் இரத்தக் கோடு
எது இருக்கும் உன் வயலில்?
பறக்கும் பச்சை கிளிகள்!
சிதைக்கும் வெட்டுக் கிளிகள்!
சுற்றி உற்று பார்.
கோவிலிருந்து புறப்படும் புறா
மசூதியின் மடியில் அமர்கிறது
சர்ச்சின் ஜன்னலில் இளைப்பாறி
அடுத்த நகர்வுக்கு வரைபடம் தயாரிக்கிறது
புறாவிற்கே புரிகிறதே…
உன் கருவூலம் கவனி.
பாரதியின் பேனா.
அவன் தாசன் கண்ணாடி.
பட்டுக்கோட்டையின் சட்டை.
பெரியாரின் கைத்தடி.
கோட்சேயின் குண்டா கொண்டு வருவாய்?
தமிழா தமிழா எடை போடு
தக்கவர் பின்னால் நடை போடு!