கவிஞர் ஜீவி

அவரை படரக்

அவரை படரக்
கை கொடுக்கிறது
முருங்கை

அழுக்கைச் சாப்பிட்டுக்
குளத்தைச் சுத்திகரிக்கிறது
மீன்

தன்னையே உருக்கி
ஒளி கொடுக்கிறது
மெழுகுவர்த்தி

இரண்டு தாள்களை
இணைக்கப் பயன்படுகிறது
குண்டூசி

தின்று தீர்க்கிறோம்
வாழ்க்கையை

வளரும் செடியின்

வளரும் செடியின்
கிளைகளை முறிப்பான்
முருகேசன்
அடுத்தவன் பம்பரத்தை
ஆணியால் குத்துவான்
முத்தலிப்பு
புதுப்பேனாப் பார்த்தால்
நிப்பை உடைப்பான்
சப்பாணி
பட்டாம் பூச்சியின்
இறக்கைகளைப் பிய்த்து
சந்தோ~ப்படுவான்
அந்தோணிசாமி
கால்பந்து விளையாட்டில்
அடுத்தவன் காலைத்
தட்டி விடுவான் தங்கராசு

பிள்ளைகள் பிராயத்தில்
விளையாட்டாய்ச் செய்வதை
வினயமாய்ச் செய்கிறார்கள்
பெரியவர்கள்.

விளக்குகளை விடவும்

விளக்குகளை விடவும்
இருட்டையே நம்புகிறார்கள்
பலூனைப் பெரிதாக்கவே
பயன்படுகிறது காற்று
நதி போலவே
நடந்து கொள்கிறது
சாக்கடை
கை குலுக்குவதைவிடவும்
நகங்களால் கீறவே
விரும்புகிறார்கள்
புத்தகங்கள் படிப்பதில்லை
பூக்களோடு சிரிப்பதில்லை
நிலா ஒளிபரப்பு
எவருமே பார்ப்பதில்லை
கரன்சிகளை எண்ணியே
கழிகின்றன நிமிடங்கள்