கவிதைகள்

கோடி நட்சத்திரங்கள்

கோடி நட்சத்திரங்கள் ஜொலித்தாலும் அம்மாவின் ஜோடி மூக்குதிக்கு இணையாகாது .

இளம்பச்சை கிளிப்பச்சை கரும்பச்சைபார்த்தால் பசி தீரும் தாவரம் பார்.

சத்தியம் செய்கிறேன்கத்தியை விடவும் கூர்மையானது என் கவிதை.

கணக்கு பார்க்கையில்தான் தெரிகிறது இருப்பதே பெரிய விஷயம் என்பது

நகர்.நட.ஓடு.என்ன செய்தாலும் சுவடுகள் முக்கியம்.

குறைகள் இருப்பதாய் கவலை கொள்கிறாய் ஓட்டைகள் இல்லாத குழலை வாசிக்க முடியாது.

நாடகத்துக்கு சினிமா. சினிமாவுக்கு சின்னத்திரை. சின்னத்திரைக்கு யூடியூப் சேனல். இடுப்பிலிருந்தே இறங்குகின்றனதுடுக்கான குழந்தைகள். கொழு சுமப்பவன்அழுகிறான் எழு மானிடமே

வளர்ந்த கதை

எட்டாவது படிக்கிறபோதே என்னிடம் தொற்றிக்கொண்டுவிட்டது. பார்க்கிற எல்லாவற்றையும் படிக்கிற பழக்கம். எங்கள் கிராமம் நெய்வேலியிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கரம்பக்குடி உயர்நிலைப்பள்ளியில்தான் படித்தேன். நானும் என் அக்காள்களும், நண்பர்களும் நடந்து போய்வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு புத்தகத்தை ஆளுக்கு ஒரு பாராவாக வாசித்தபடியே நடப்போம். அப்போது வந்து கொண்டிருந்த மணியன், ராணிமுத்து போன்ற மாத இதழ்கள் எனது வாசிக்கும் பசிக்கு தீனிப்போட்டது. கலைஞர், சாண்டியல்யன், மு.வ., விந்தன், தீபம்.நா.பார்த்தசாரதி, லெட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி, ஜெயகாந்தன், பாலகுமாரன் உள்ளிட்ட பலரோடும் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது அந்த காலத்தில்தான். கதைகளோடு கைகுலுக்கி கவிதைகளின் பக்கம் வந்தேன்.

பிஸ்கட் பாக்கெட்டை பிரித்ததும் அப்படியே சாப்பிட்டுவிடுகிற சில குழந்தைகள் மாதிரி எந்த புத்தகத்தையும் ஒரே மூச்சில் வாசிப்பதிலும், அதிலுள்ள விஷயங்களை வார்த்தை மாறாமல் சொல்வதிலும் ஒரு சுகம் எனக்கு. பேச்சுப்போட்டிகளுக்குப் பரிசாகக் கிடைத்த சில புத்தகங்களும் என் மூளையின் மடிப்பை அதிகப்படுத்தின. ஆசிரியர் எழுதிக்கொடுத்த பேச்சை ஆரம்பகாலத்தில் பேசிவந்த நான் பிறகு, எனது சொந்தப்பேச்சை உரத்த குரலில் பேசிப் பலரின் கைதட்டல்களைப் பெற ஆரம்பித்தேன். புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற சில பேச்சுப்போட்டிகளில் பரிசுகள் கிடைக்க ஆரம்பித்ததும் பலரும் வியப்பாய் பார்த்தனர். இடையில், முயல் என்னும் சிறுவர் இதழில், தினத்தந்தியில் எனது ஜொக்குகள் வெளியாகிப் பள்ளி மாணவர்களிடையே ஒரு மரியாதையை ஏற்படுத்தித் தந்தன. இன்னொரு பக்கம் படம் வரைவதில் ஆர்வம் கொண்டு கலர் சாக்பீஸ்களாலும் வாட்டர் கலர் கொண்டும் நிறைய படங்களை வரைந்து சகமாணவர்கள் மத்தியில் ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்டேன்.

1978-ல் புதுக்கோட்டை முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி நிலை படித்துக்கொண்டிருந்தேன். நிறைய புத்தகங்களை எடுத்துப் படித்ததில் எனது ஜாமின்ட்ரி பாக்ஸில் ஏராளம் சொற்கள் சேர ஆரம்பித்தன. கவியரங்கில் கலைஞர் நூலில் இருந்த கவிதைகளை பள்ளிக்கூடத்து வெட்டவெளியிலும், மைதானத்து மரங்களிடமும், உரத்த குரலில் வாசித்து கிறங்கிக்கிடந்தேன். அந்த சமயத்தில் நடந்த பேரறிஞர் அண்ணா கவிதைப்போட்டியில் கலந்து கொள்ளச்சொல்லி ஆறுமுகம் தமிழய்யா அனுப்பிவைத்தார். அப்போது படித்த வரிகளின் சாயலில் எழுதப்பட்ட எனது கவிதைக்கு முதல்பரிசு கிடைத்தது. தொடர்ந்து இன்னும் சில கவிதைகள் பள்ளி ஆண்டு மலர் வெளியாகி, பாராட்டுக்கிடைத்தது. அப்போது கவிதைத் தொகுப்பைப் பரிசாக பெற்ற நான் இன்னும் சில ஆண்டுகள் கழித்துப் பரிசுபெறும் மாணவர்களுக்கு எனது தொகுப்பு பரிசளிக்கப்பட வேண்டும். அது மாதிரி வளர வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். 1980-ல் கோவையிலிருந்து வெளியாகும் துளிகள் இதழில் எனது மூன்று சிறுகவிதைகள் வெளியாகி பலபேரின் பாராட்டைப் பெற்றன. இடையில் திருச்சி மகரந்த மண்டபம் எனது கவிதைகளை காற்றில் விதைத்தது. 1983-ல் தொழுநோய் ஆய்வாளர் பயிற்சிக்குச் சென்றபோது சக பயிற்சியாளர் குறித்தும், பயிற்சி கொடுத்த டாக்டர்கள் குறித்தும் மெஸ்சில் வேலை பார்ப்பவர்கள் குறித்தும் கவிதைகள் எழுதிப் பலரின் பிரியத்துக்குரியவன் பட்டியலில் சேர்ந்தேன். ஒவ்வொரு சம்பவத்தையும் நான் கவிதையாகச் சொல்ல என் மீது ஒரு மெல்லிய வெளிச்சம் படர ஆரம்பித்தது. 1984-ல் அறந்தாங்கியில் எல்.ஐ-ஆகப் பணியில் சேர்ந்தேன். அது என் வாசலை அகலத்திறந்த ஆண்டு எனலாம். வைரமுத்து, மு.மேத்தா, சிற்பி, தமிழன்பன், கந்தர்வன், மீரா, பாலா என அனைவரின் கவிதை நூற்கலையும் வாங்கி அறையில் நள்ளிரவு கடந்த பின்னும் வாசித்து ருசிப்பேன். அப்புறம் கந்தர்வன், நிலவன், இளங்கோ ஆகியோருடன் பழக்கம் ஏற்பட புதுக்கோட்டையின் பல்வேறு த.மு.எ.ச. கவியரங்குகளில் கலந்து கொண்டு எனது கவிதைகளை விதைக்கத் தொடங்கினேன். நையாண்டியோடு அன்றாட அரசியல். நவமாய்ச் சில புதுவரிகள், என தெறித்த என் கவிதைகள் வெகுவாக வரவேற்பு பெற்றன.

தீக்கதிர் தொடங்கி கணையாழி வரை எனது கவிதைகள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தன. கடலூர், கோவை, திருச்சி, கரூர், புதுச்சேரி என திக்குகள் எங்கும் சுற்றி கட்டம்போட்ட சட்டைகளோடும், கவிதைகளோடும் மக்களை சந்தித்து வந்தேன். பட்டுக்கோட்டையில் நடந்த த.மு.எ.ச கவியரங்கில் தலைவர் கந்தர்வன். சிறப்பு அழைப்பாளர் கவிஞர் மீரா.புதிய கவிஞர்களை தன்தோள்களில் வைத்து கொண்டாடும் பழக்கம் உள்ள மீரா என் கவிதைகளுக்குப் பார்வையாளர்களிடம் கிளம்பிய கைத்தட்டல்களைப் பார்த்துவிட்டு, உங்கள் கவிதைகளை எல்லாம் உடனே கொடுங்கள், ஒரு தொகுப்பாக்கிவிடலாம் என்றார். மேடையில் இருந்து இறங்கியதும் கந்தர்வனும் அதை வழிமொழிந்தார். அப்புறம் சில நாட்கள் தவிப்போடு நகர்ந்தன. கவிதைகளைத் தாள்களில் எழுதி கந்தர்வன், நிலவன், முருகேஷ் ஆகியோரோடு கலந்து கொண்டு தொகுப்பை இறுதிப்படுத்தினேன். கந்தர்வன் அழகான ஒரு முன்னுரை எழுதித்தந்தார். 1993-ல் சென்னையில் நடந்த த.மு.எ.ச மாநாட்டில் கவிதைகள் வாசித்து மகிழ்ச்சிபொங்க வந்த என்னிடம் வானம் தொலைந்து விடவில்லை யின் முதல் பிரதியை நீட்டினார் அன்னம் பதிப்பக விற்பனையாளர். மாத நாவலின் சைஸில், தென்னை மரங்கள் உதிக்கும் சூரியனின் பின்னணியில் இருப்பதுபோல் அமைந்த அட்டைப்படம் என் சட்டைக்காலரை சற்றே உயர்த்த சொல்லியது. அந்த அட்டையின் மஞ்சள் வண்ணம் இப்போதும் என் ஐந்து விரல்களிளும் ஒட்டிக்கிடக்கிறது.
விறகு எரிந்தால் கரியாகும்
கரி எரிந்தால் சாம்பலாகும்
உன் நினைவுகள் மட்டும்.

எதுவுமே மிஞ்சாமல் எரிக்கிறதே எப்படி ? உள்ளிட்ட பலகவிதைகள் பேசப்பட்டன நிறைய இதழ்கள் நூல் அறிமுகம் பகுதியில் வரவேற்பு பூச்செண்டு வழங்கின. நூலக ஆர்டர் கிடைத்ததை மீரா மகிழ்ச்சியோடு அறிவித்த நாளில் நான் வாங்கி வந்திருந்த 200 பிரதிகளுக்கான தொகையை ஒப்படைத்தேன். அவர் கண்களில் ஆச்சரியம் காட்டினார். ஒன்று, இரண்டு நூல்களைத் தவிரப் பெரும்பாலும் என் சங்கத்திலும், கலை இரவுகளிலும் புத்தகங்களை வாங்கிய தோழர்கள் தொகைகளைத் திருப்பித்தந்து எனது அடுத்தடுத்த தொகுப்புகளுக்கு அச்சாரம் போட்டனர். மீராவே இருவேறு முகங்களையும் வெளியிட அடுத்த ஐந்து தொகுப்புகளை இனிய தோழன் ஸ்ரீரசா காலம் வெளியீட்டின் மூலம் கொண்டு வந்தார். கவிதை ரசிகர்கள் பல அடுக்குகளில் இருக்கிறார்கள். வெகு ஜனங்களுக்கான கவிதைகள் என்னுடையவை. பித்த வெடிப்புக்காரனின் பாதம்போல் பிளவுண்டு கிடக்கிற மனசுகளுக்குக் களிம்பு தடபுபவை என் கவிதைகள். எனது கவிதைகள் எளிமையானவை என்று சிலர் விமர்சனம் செய்தாலும் திட்டமிட்டே நான் அவற்றை எழுதுகிறேன். வீதியில் நடப்பவர்களோடு கைகொடுக்க வேண்டுமென்றால் மாடியிலுருந்து இறங்கித்தான் வரவேண்டும். கெட்டித்தயிர் சிலருக்கத்தான் போதும். நிறைய பேரின் தாகம் தீர்க்க வேண்டும் என்றால் நீர்மோர் தான் தேவை.

கவிதைத் தொகுப்புகளுக்கு வரவேற்பில்லை என்பது என்னைப் பொறுத்தவரை அவநம்பிக்கைகாரர்களின் குரல். எனது முதல் தொகுபிற்கே ம.தி.மு.க இலக்கிய அணியின் பரிசு கிடைத்ததும் பலர் எனது கவிதைகளை இதழ்களில் மறுபிரசுரம் செய்வதும் எனது பேனாவை ஈரங்காயாமல் வைத்திருக்கிறது. மீராவின் மகன் கதிர் கொண்டுவந்த ஜீவீ கவிதைகள் தொகுப்புக்கு கவிதை உறவு அறக்கட்டளை பரிசு நொய்யல் இலக்கிய விருது உட்பட பலபரிசுகள் கிடைத்தன. மேலும், வாய்ப்பு வருகிற போதெல்லாம் கவியறங்குகளுக்கு தலைமையேற்றும் பங்கேற்றும் உரத்த குரலில் எனது கவிதைகளை ஊர் முழுக்க கொண்டு சேர்த்தேன். நான் படித்து வியந்த பல கவிஞர்களுடன் மேடைகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு வந்ததும் வானொலி, தொலைக்காட்சி, பேஸ்புக், பிளாக்ஸ்பாட் என புதிய தளங்களில் என் கவிதைகள் வரவேற்பு பெறுவதும் குறிப்பிடத்தக்கது. ஒரு இரயில் இன்ஜினாய் எப்போதும் இயங்கு கூடவே பலரை சேர்த்து கொண்டு உற்சாகமாக கூவிக்கொண்டு போன்ற எனது வரிகளை சிலர் லெட்டர்ஹெட்-ல் அச்சிட்டு வைத்திருக்கிறார்கள். இரண்டு கைகளின் கைவிரல்களை போல் 10 கவிதை நூல்கள் மற்றும் கவிதை குறித்த கட்டுரை நூல்களை தமிழ் கவி உலகுக்கு தந்திருக்கிறேன். 40-க்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளுக்கு அணிந்துரை தந்திருக்கிறேன். ருசித்து வாசித்த தொகுப்புகள் குறித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான வரவேற்புகளைத்தான் இளம் கவிஞர்களுக்கு என் அணிந்துரைகளில் பங்கிட்டுத் தருகிறேன். கவிதையும், கவிதை சார்ந்த வாழ்வாகவும் எனது ஒவ்வொரு நாளும் புலர்கிறது. அழகியலும், சமூக அக்கறையும் கொண்ட கவிதைகளை எழுத எப்பொழுதும் என் பையில் பேனாக்களும், பேடுகளும் இருக்கும். என்னை பொருத்த வரைக்கும் காற்று இருக்கும் வரை கவிதைகளும் இருக்கும். வாசிப்பவரின் மன மலர்களில் உட்காந்து கொள்கிற பாட்டுப்பூச்சிகளை பறக்க விட்டபடி இனி என் கவி பயணம் தொடர்வேன்.