தீபாவளி-சிதறல்கள்

சுய விமர்சனம்

அலைகள் எழுப்பியதாய்
அக மகிழ்கிறாய்.

உனது குமிழிகளை
காலம் உடைத்துப்போடும்போது
பாவம்
உடைந்து போவாய்.

ஏணிப் படிகளில் நின்று கொண்டு
சிகரம் தொட்டாய்
சிலிர்த்துக் கொள்ளாதே.

ஒரு செங்கல் உருவலில்
அடித்தளமில்லா கோட்டைகளை
கலைத்துப் போடுவதுதான்
காலத்தின் வரலாறு.

உனது கத்தி சுழற்றலில்
காயம் பட்ட சகாக்களின்
கசிவை உணராத நீ,
வெகுமக்களிடம் போய்
என்ன உன்னத இலக்கியத்தை
பேசிவிடப் போகிறாய்?
தெருவிளக்கின் வெளிச்சத்தில்
ஜொலிக்க ஆரம்பித்த நீ
போக்கஸ் லைட்களின் பின்னாலா
போவது?
வெளியே மட்டுமே
வெளிச்சம் இல்லை.

உனது அறை இருட்டை விரட்ட
தோழர்களிடம் சுடர் தேடு.
ஒற்றை நட்சத்திரமாய்
ஒளிர்வதைவிட
ஆயிரம் சுடர்களேற்றும்
அகலாவது முக்கியம்.

நேர்படப் பேசுவது உறுத்துவதால்
உளறல்களின் நுரைகளில்
கரைந்து போகாதே.

உனக்கொருமைச் செட்டையும்
மற்றவர்களுக்கு ஹியரிங் எய்டையும்
தந்திருப்பதாக தப்பிதமாக
கற்பிதம் செய்யாதே.

கர்வம்
விரலுக்கான மோதிரமல்ல
வெட்டி எறியப்பட வேண்டிய நகம்
எந்த மாற்றமும் முழு மாற்றமில்லை.

காணும் காட்சிகள்
தோற்ற பிழையல்ல
தோற்றப் பிழை என விளங்கு.

எட்டுத் திசையிலும் கைகளை வீசி
வெற்றி மாலைக்கு பூப்பறி
உன்னிடமிருந்தே மாற்றத்தை
உருப்படியாய் இனி தொடங்கு.

உயரத்தில் தமிழை வைப்போம்

உலக மொழிகளில்
திலகமொழி தமிழ்.

உச்சரிக்கும் போதே
உற்சாகம் பிறக்கும்.

எழுதிப்பார்க்கையில் ஏடுகள் மணக்கும்.

நேர்முனை
எதிர்முனை
இவற்றை இணைத்தால்
மின்சாரம் பிறக்குமாம்.

பேனா முனையிலிருந்து
பிறக்கும் மின்சாரம் தமிழ்.

நம் அன்னைத் தமிழில்
ஆண்டுக்கணக்காய் மூன்று தானா?
ஆட்சித்தமிழ் மட்டுமென்ன
ஆகாதா?
தமிழால் முடியும்
தமிழால் முடியாவிட்டால்
எதனால் முடியும்?

யாப்புத் தமிழில்
கோப்புகள் வரட்டும்.

சங்கத் தமிழ்
தொழிற்சங்கத் தமிழாகட்டும்

நீதித்துறை நிதித்துறை
பணியாளர் விதித்துறை
எல்லாத் துறைகளிலும்
வெல்லத் தமிழ் இடம் பெறட்டும்

மருந்துச் சீட்டுகள் தமிழில்
மதிப்பெண் அட்டைகள் தமிழில்
பொருந்தும் இடத்திலெல்லாம்
புகுந்து வரட்டும்.

மற்ற மொழிகளெல்லாம்
கற்றுக்கொள்ள.
தமிழ்மொழி மட்டும்
பற்றுக்கொள்ள.

ஆங்கிலத்தில் தான் எல்லாம் முடியும்
என்ற எண்ணம் விடுவோம்.

அரசு எந்திரத்திற்கு
தமிழ் எண்ணெய் இடுவோம்.

கணினியில் வரட்டும்
கனித்தமிழினி.

இனி பென்சில்களை அல்ல – நாம்
உணர்வுகளைக் கூர்தீட்டுவோம்.

ஊர் கூடித் தேர் இழுப்போம்
உயரத்தில் தமிழை வைப்போம்.

(தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி பன்பாட்டுத்துறை நடத்திய கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றது)