சின்னஞ் சிறகுகள்

ஏரியிலே மண்ணெடுத்துச்

ஏரியிலே மண்ணெடுத்துச்
சுவர் அமைத்தாள்
சேரியிலே வசித்து வரும்
சின்னப் பொண்ணு

காயும் வரை
காத்திருந்து
செம்மண் பூச
எதிர்வீட்டுச் செல்லம்மாள்
அழகு என்றாள்.

அழகு மட்டும் இல்லையக்கா
பாதுகாப்பு
பதில் சொன்னாள் அவளுக்குச்
சின்னப் பொண்ணு.

விளக்குகளை விடவும்

விளக்குகளை விடவும்
இருட்டையே நம்புகிறார்கள்
பலூனைப் பெரிதாக்கவே
பயன்படுகிறது காற்று
நதி போலவே
நடந்து கொள்கிறது
சாக்கடை
கை குலுக்குவதைவிடவும்
நகங்களால் கீறவே
விரும்புகிறார்கள்
புத்தகங்கள் படிப்பதில்லை
பூக்களோடு சிரிப்பதில்லை
நிலா ஒளிபரப்பு
எவருமே பார்ப்பதில்லை
கரன்சிகளை எண்ணியே
கழிகின்றன நிமிடங்கள்