என்னைப் பற்றி

கவிஞர் ஜீவி

  • கவிஞர்
  • பட்டிமன்றப் பேச்சாளர்
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர்
  • தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்

இலக்கியத்தின் மடியில் நான்

நான் ஐந்தாவது படிக்கும்போதே என் மேடையேற்றம் ஆரம்பித்துவிட்டது. இலக்கிய போட்டிகளில் வருடத்திற்கு ஐந்து பரிசுகளையாவது தட்டிவிடுவேன். பரிசாகக் கிடைத்த புத்தகங்கள் எனக்கு வாசிப்பு ருசியை ஏற்படுத்தின. அதன் பிறகு, எனது நிறைய நேரம் நூலகங்களில் செலவானது. புதுச்சட்டையைப் பார்த்தவுடன் அணிந்துகொள்ள ஆசைப்படுகிற குழந்தை மாதிரி எல்லா புத்தகங்களையும் ஒரே மூச்சில் வாசித்து விடுவேன். 1978ல் புதுக்கோட்டை முன்மாதிரி பள்ளியில் படிக்கும்போது, தமிழாசிரியர் ஆறுமுகம் கவிதைகளோடு என்னை கை குலுக்க வைத்தார். நான் கலந்து கொண்ட முதல் கவிதைப் போட்டியிலேயே பரிசு கிடைக்க, எனக்குள் உற்சாக ஆறு ஊறியது. அதன் பிறகு பள்ளி ஆண்டு மலரில் சில கவிதைகள் இடம் பெற்றன. அந்த வரிகளுக்குக் கிடைத்த வரவேற்பு தான் இன்றுவரை என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

எனது முன்னோடி

நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று வறுமையைத் தின்று உள்ளுக்குள் சுடர் வளர்த்த பாரதி எனது ஆதர்சம். உழைக்கும் மக்களை உன்னத வாழ்க்கைக்கு அழைத்த பட்டுக்கோட்டையின் பாட்டு வரிகள் எனது விழிகளை விரிய வைத்தன. அதனைத் தொடர்ந்து, வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மீரா, தணிக்கைச் செல்வன், கந்தர்வன் என நீண்ட பட்டியல் இருக்கும். ஏராளமான கவிஞர்களின் தொகுப்புகளை வாசித்து அவற்றில் உள்ள நல்ல அம்சங்ககளை எனதாக்கிக் கொண்டேன். இப்பொழுது பார்க்கும் ஜீவி பலரின் பங்களிப்பு தான்.