கவிப் பயணங்கள் முடிவதில்லை

பழைய தஞ்சை மாவட்டத்தில் கறம்பக்குடிக்கு அருகில் உள்ள நெய்வேலி என்னும் சிற்றூரில் பிறந்து மண்பாண்டம் செய்யும் சத்தங்கள் கேட்டு அந்த சத்தங்களுக்கு ஏற்ப சின்னஞ்சிறு வார்த்தைகளைப் போட்டு சாலையோர புழுதிபறக்க பனை நுங்கு வண்டியோட்டி சக சிறுவர்களை திரும்பிப் பார்க்க வைத்த சிறுவன் ஜீ.வெங்கட்ராமன் தான் பின்னாளில் கவிஞர் ஜீ.வியாக உலகறிந்த கவிஞனாக பட்டிமன்ற பேச்சாளனாக, ஊழியர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் போராளியாக தோழர்களுடன் தோள்கொடுத்து துணை நின்றவர்.. இன்றும் நிற்பவர்.. மனச்சலனத்துடன் அல்லது சங்கடத்துடன் இருப்பவர்களின் தோள்களில் கை போட்டுக்கொண்டு ஒரு பிரியமான நண்பனைப்போல பேசுவது தான் கவிதை என்று கவிதையே வாழ்க்கையென கவிதைகளுக்காகவே தொடர்ந்து இயங்கிவரும் கவிஞரும், சிறந்த பேச்சாளருமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் ஜீவி அவர்களுடன்.. ஒரு இலக்கிய பயணம் நம் வாசகர்களுக்காக..

கேள்வி : கவிஞர் ஜீவி யார்?…

ஜீவி : புழுதி படிந்த பாதங்களும், மாசுபடியாத மனசுகளும் கொண்ட வாஞ்சை மனிதர்களின் பூமியான நெய்வேலி, கறம்பக்குடி போன்ற கிராமப் பகுதிகள்தான் என் ஆரம்பகால அனுபவங்களுக்கு களம் தந்தவை. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்களின் புத்தகங்களை வாசித்து இதயத்தின் செல்களில் சேகரித்துக் கொண்டேன். 1978ல் முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் (புதுகை) கலந்துகொண்ட கவிதைப் போட்டியில் முதல்பரிசு கிடைத்து, எனக்குள் இருந்த கவிதை ஆற்றலை விசிறிவிட்டது. கல்லூரி மலர்கள், திருச்சி வானொலி, சிற்றிதழ்கள் என எங்கும் கவிதை வரிகளை விதைத்து 90களில் எனக்கான ஒரு நடையைத் தேர்ந்தெடுத்தேன். அந்தக் காலங்களில் வண்ணக்கதிரிலும், செம்மலரிலும் வந்த என் கவிதைகள் பரவலான வரவேற்பைப் பெற்றன. வானம் தொலைந்து விடவில்லை, இருவேறு முகங்கள், அஞ்சறைப் பெட்டி, நைளான் ஊஞ்சல், சின்னஞ்சிறகுகள்; ‘ஜீவி கவிதைகள்’ சமீபத்தில் ‘அசுர சாதகம்’ என்ற ஏழாவது தொகுப்பை அன்பிற்குரிய நண்பர் கதிர் வெளியிட்டுள்ளார். இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு இதழ்கள், ஏராளமான கவியரங்கங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள், இனைய இதழ்கள் என என் வட்டம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அறந்தாங்கியில் சுகாதாரத்துறையி;ல் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து கொண்டே சகமனிதர்களின் மீதான நேசத்தையும் அநீதிக்கு எதிராகக் கொள்ள வேண்டிய ஆவேசத்தையும் எழுதும் மை பேனாக்களை எனது கட்டம் போட்ட சட்டைப்பையில் இப்போதும் செருகி வைத்திருக்கிறேன். இப்போது பார்க்கும் ஜீவி பலரின் பங்களிப்பு.

கேள்வி : பல மேடைகளில் ஏறியதால் இன்று அறியப்பட்ட கவிஞரானீர்களா?

ஜீவி :இதில் எனக்கு உடன்பாடு இல்லை. சில நிகழ்வுகளுக்கு வேண்டுமானால் இந்த அமைப்புகள் என்னைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் இயக்கத்தைத் தாண்டியும் பல பேரிடம் என்னுடைய கவிதைகள் போய்ச் சேர்ந்திருக்கிறது. த.மு.எ.க.ச. என்பது எதைப் பாட வேண்டும் என்பதையும் மக்களைத் தொடர்ந்து சந்திக்கிற வாய்ப்புகள் எப்படி பாட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. எனினும் மக்கள் விரும்பும் கவிதைகளை நான் கொடுத்திருப்பதாகத்தான் நினைக்கிறேன்.

கேள்வி : கவிதைக்குப் பல முகங்கள், பல தளங்கள் இருக்கின்றன. உங்கள் தளம் எது?

ஜீவி :இன்று மனிதன் நெருக்கடியான நிலையில் வாழ்கிறான். பணம் தேடி அலைகிற வாழ்க்கை, பதவி தேடி அலைகிற வாழ்க்கை, தனக்கான இடம் தேடி அலைகிற வாழ்க்கை. இதற்கு மத்தியில் தன்னைத் தானே தக்கவைத்துக் கொள்ள கவிதை தேவைப்படுகிறது. கவிதை ரசிகர்கள் பல அடுக்குகளாக இருக்கிறார்கள். மனச்சலனத்துடன் அல்லது சங்கடத்துடன் இருப்பவர்களின் தோள்களில் கை போட்டுக் கொண்டு ஒரு பிரியமான நண்பன் பேசுவது போல் என்னுடைய கவிதைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். என்னுடைய தளம் வாழ்க்கையின் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிற மனிதனுக்கு நம்பிக்கை தருகிற கவிதைகளைத் தருவதுதான். அதனால்தான் பித்த வெடிப்புக்காரனின் பாதம் போல பிளவுண்ட மனசுகளுக்கு களிம்பாகவே என் கவிதைகளை எழுதுகிறேன்.

கேள்வி : இன்றைய கவிதை உலகு பற்றி உங்கள் பார்வை…

ஜீவி : எழுத்தும், கவிதையும் சமீபத்தில்தான் அறிமுகமான இளைஞர்களும் பெண்களும் ஏராளமாய் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். நவநவமாய், விதவிதமாய் பூத்துக் குலுங்குகின்றது கவிதைப் பூங்கா. எளிமையும், வலிமையுமான காய்ப்பூக்களை அடையாளம் கண்டு தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டும். எனினும் எழுதப் படிக்கத் தெரிந்த கோடிக்கணக்கான மனிதர்களிடையே ஆயிரக்கணக்கில்தான் கவிதை ஆர்வலர்கள் இருக்கிறார்கள். கவிஞர்களின் எண்ணிக்கையோ இன்னமும் குறைவு. இதிலும் கவிஞர்கள் குழுவாகப் பிரிந்து தங்களுக்குள் முரண்டுபிடித்துக் கொள்கின்றனர். வேண்டியவர் படைப்பென்றால் விண்ணளவு உயர்த்துவதும், வேண்டாதவர் கவிதைகளை திரைபோட்டு மறைப்பதும் ஆரோக்கியமான போக்கு ஆகாது. கவிதை ரசிகர்கள் பல அடுக்குகளில் இருக்கிறார்கள். தனது வயிற்றுப் பசிக்கு இட்லி, சப்பாத்தி, தோசைகள் என விதவிதமாய் எடுத்துக் கொள்வது போலவே கவிதைப் பசிக்கும் பல்வேறு விதமான கவிதைகளை தேர்ந்தெடுக்கத்தான் செய்வார்கள். அழகானது கவிதை, அறிவானது கவிதை, சமூக அநீதிக்கெதிராகக் குரல் கொடுப்பது கவிதை. இந்த முப்பரிமாணங்களோடு வெளிப்படும் கவிதைகள் பேசப்படும். பரவலான வரவேற்பைப் பெற்றுவிட்டதாலேயே அந்தக் கவிதைகள் அடர்த்தியானவை அல்ல என்று சிலர் அடம்பிடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

கேள்வி : கவிதைக்கு என்ன வல்லமை உண்டு..

ஜீவி : அன்பு மழை பெய்யாத வறண்ட பிரதேசமாக மாறிவிட்டது பலரின் மனசுகள். பணவெறியும், ஜாதி, மதவெறியும் வெற்றிகொள்ள வேண்டுமென்ற வெறியும் சமூக மதிப்பீடுகளைச் சாய்த்துவிட்டன. பிளேடால் தன் விரலை வெட்டிக் கொண்டு விடுகிற மனிதனுக்கு அதில் பஞ்சை வைத்து அழுத்தும்போது எப்படி இதமாக இருக்கிறதோ அப்படி காயப்பட்ட நெஞ்சுக்குக் கவிதை இதமாக இருக்கிறது. ஐஸ்கட்டி போல் விறைத்துப்போன மனிதர்களின் விரல்களையும் ஒரு நல்ல கவிதை கைதட்டவைக்கும், சக மனிதனுக்காக அழவும், குடும்பத்தோடு சேர்ந்து சிரிக்கவும், அநீதிகளுக்கு எதிராக குரல் உயர்த்தவும், தன் பிஞ்சு மகளின் ஆடையில் உள்ள பூக்களை அடையாளம் காணவும், கரிக்கோட்டின் கிறுக்கல்கள் போல் வரும் நாட்களுக்கு மத்தியிலிருந்து வானவில் நாட்களை அடையாளம் காணவும் கவிதை கற்றுக் கொடுக்கும்.

கேள்வி : கவிதையின் நோக்கும் போக்கும் இன்று எப்படி இருக்கிறது?

ஜீவி : பொதுவாக கொண்டாட்ட மனோபாவம் குறைந்திருக்கிறது. நவீன வாழ்வின் ஆனந்தங்களை, அவஸ்தைகளை தெறிப்புகளாக பதிவு செய்வது பரவலாகியிருக்கிறது. இழந்து போன சந்தோசங்களுக்கு ஏங்கும் நஸ்டால்ஜியா கவிதைகள் அங்கங்கே முகம் காட்டுகின்றன. பிரபலம் என்று நம்பப்படும் பல கவிஞர்கள் ஜால்ராக்களைத் தூக்கிக் கொண்டு பிரபலங்களைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஒளவையாரின் பேத்திகள் அதிகரித்திருக்கிறார்கள். அவர்களின் அவஸ்தைகளையும் ஆணாதிக்க சமூகம் திணித்த அநீதிகளையும் பெண்கள் மட்டுமே சந்திக்கும் பிரத்யோகப் பிரச்சனைகளையும் சின்னச் சின்ன சொல்வெட்டுகளாகச் செதுக்கி வருகிறார்கள். அரசியல் பகடி, சமூக அவலங்களைச் சாடும் நெற்றியடிக் கவிதைகளை முற்போக்கு முகாம் கவிஞர்கள் எழுதி வருகிறார்கள். தலித்தியம், பெண்ணியம், ஈழத்துச் சோகம் என பேரோசையோடு பொங்கியெழுந்தக் கவியுலகு இப்போது எல்லாவற்றையும் மெல்லிய குரலில்தான் சொல்லி வருகிறது. எனக்கு அந்த அனுபவம் நேரவில்லை என்றாலும் புதிய திறமை வாய்ந்த கவிஞர்களின் தொகுப்புகளைப் போட பதிப்பகங்கள் மறுத்துவிடுகின்றன. பெரும்பாலான கவிஞர்கள் தங்கள் கனவு வரிகளை மனைவியின் வளையல்களை அடகு வைத்து வாங்கிய தாளில்தான் அச்சடிக்கிறார்கள். கவிதை விமர்சகர்களோ எழுதிய வரிகளுக்கு வரவேற்பு சொல்லாமல் எழுத வேண்டிய பட்டியலை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். திரைப்பட, தொலைக்காட்சிக் கலைஞர்களின் பின்னால் அடித்துப் பிடித்து ஓடும் தமிழ்ச் சமூகம் கவிஞர்களிடம் ஆட்டோகிராப் கேட்டு அலையும் காலம் விரைவில் வரவேண்டும்.

கேள்வி : பட்டிமன்றம், உரைவீச்சு, கவியரங்கம் இவற்றின் மூலம் மக்களிடம் தினந்தோறும் உங்களுக்கு கிடைக்கும் அனுபவம்…

ஜீவி : பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது மாதிரி ஒவ்வொரு மேடையும் அனுபவங்களின் புதையல்களாய் அமைந்துவிடுகின்றன. அரைமணி நேரம் பேச ஆறிலிருந்து, எட்டு மணிநேரம் வரை அலுப்பூட்டும் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எனினும் நிகழ்ச்சி முடிந்ததும் ‘நீங்க நல்லா பேசினீங்க’ என்று கண்களில் மின்னல் தெறிக்க சிலர் சொல்லும்போது இரத்தக் குழாய்களில் மின்சாரம் பாய்கிறது. வாசிக்க நேரமில்லாமல் இருக்கும் பல பேரிடம் இலக்கிய ரசனைகளைத் தூண்ட பட்டிமன்றங்களும் வழக்காடு மன்றங்களும் பயன்படும் என நான் உறுதியாய் நம்புகிறேன். நிர்பந்தத்திற்குப் பணிந்து கூடியுள்ள வௌ;வேறு மனிதர்களை முதல்சில நிமிடங்களிலயே கவர்ந்து, சுவாரசியத்திற்காகக் கவிதைகளையும் சமூக சிந்தனைகளையும் பொதிந்து தருவதுதான் எனது பாணி. அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவரை சுமார் 2000 நிகழ்வுகளில் பங்கெடுத்திருப்பேன். நேர்த்தியான உடையும், உதடுகளில் நெளியும் புன்னகையும், புத்தகங்களில் சேகரித்த புதிய விஷயங்களும் அழுத்தமான உச்சரிப்பும் எனது அடையாளமாகி எனது வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. பழைய அடிகளார், பாப்பையா, திண்டுக்கல் ஐ.லியோனி, கு.ஞானசம்பந்தன், நன்மாறன் எனப் பலரின் தலைமையில் பேசியிருக்கிறேன். நானே நடுவராக பங்கேற்ற பட்டிமன்றங்களும் நிறைய. நான், முத்துநிலவன், நந்தலாலா, மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் ஓரே நேரத்தில் வெடித்துக் கிளம்பியவர்கள். மு.முருகேஷ், ரமா.ராமநாதன், தனிக்கொடி, கவிபாலா, கவிவர்மன், ஷேக், மதி, நீலா, வெற்றிச்செல்வி, சிவக்குமார் போன்றோர் என்னோடு இணைந்து பேசி வருபவர்கள். பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு இப்போது கூடுதல் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. ஏராளமான திறமையாளர்கள் பட்டிமன்ற மேடைகளில் ஜொலிக்கிறார்கள் என்றாலும் நாலைந்து ஜோக்குகளும் இரண்டு மூன்று பாடல்களும் தெரிந்தால் போதும் பட்டிமன்ற பேச்சாhளராகவிடலாம் என சிலர் நினைப்பது என்னை வருத்தமுற வைக்கிறது. சமூக அக்கறையை வளர்க்க பட்டிமன்றங்களும் வழக்காடு மன்றங்களும் கூடுதல் பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

கேள்வி : கவிதை மனிதனின் மன இறுக்கத்தைப் போக்குமா?

ஜீவி : கவிதையே மன இறுக்கத்திலும், மயக்கத்திலும் வெளிப்படுவதாகத்தான் சிலரால் சொல்லப்படுகிறது. ஒரு வாசிப்பாளனின் மன இறுக்கத்தை மட்டுமல்ல அவனைப் புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்வதும் கவிதை. கவிதை என்பது உப்பு மாதிரி. உணவுக்கு உப்பு எப்படி சுவையூட்டுகிறதோ அதே போல உணர்ச்சியற்ற மனிதனுக்கு சுவையூட்டுவது கவிதை.

கேள்வி : இளைய படைப்பாளர்களுக்கு நீங்கள் பதிவு செய்வது..

ஜீவி : என் சகபயணிகளாய் வரவிருக்கிற இளைய தோழர்களே.. பிரபஞ்சத்தை வெல்லுகிற ஆற்றலை பொத்தி வைத்திருக்கிற உங்கள் பத்து விரல்களையும் நான் முத்தமிடுகிறேன். பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் வலைத்தளங்கள், பொதுமேடைகள் எனப் புதிய வாசல்கள் திறந்து கிடக்கின்றன. அவரவர்க்குரியதை எடுத்துக்கொள்ளுங்கள் வரிசையில் காத்திருக்கும் நிறையப் பேரை போரில் புறந்தள்ள வேண்டுமெனில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய யுக்திகளை சுவாரசியமான வித்தைககளை விரித்து வையுங்கள். சக படைப்பாளிகளைப் படியுங்கள், அவர்களை விஞ்சும் வகையில் படையுங்கள், வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கின்ற எல்லாம் பேசப்பட்ட பின்பு புதிதாய் சொல்லப் போவதில்லை, சொல்லும் முறையில்தான் புதுமை தேவை. மக்களின் மடியில் அமருங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். பால் ஒளி வீசம் பவுர்ணமி நிலவிலும் கொஞ்சம் களங்கம் இருக்கத்தான் செய்யும். குறைகள் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிராமல் நம்பிக்கை சிறகுகள் விரித்து எட்டுத் திக்கிலும் சுற்றி வாருங்கள்.

கேள்வி : கவிஞர்களுக்காகவும் அரசு நலத்திட்டங்கள் கேட்பீர்களா?

ஜீவி : இதை அரசு கண்டிப்பாகச் செய்ய வேண்டும். தான் வாழ்கிற காலத்தில் பள்ளம் மேடாக கிடக்கிற இந்தச் சமூகத்தை ஓர் அடியேனும் உயர்த்த வேண்டும் என்று துடிக்கிறவர்கள் கவிஞர்கள் தான். விதிவிலக்காக உள்ள கவிஞர்கள் சுயசார்பாக பொருளாதார ரீதியாக வசதியாக இருக்கிறார்கள். கவிதையையே முழுநேரமாக ஆக்கிக் கொண்டவர்கள் வறுமையோடு தான் வாழ்கிறார்கள். எனவே கவிஞர்களின் நல்வாழ்விற்கான ஒரு திட்டம் அரசு கொண்டு வர வேண்டும் என்பது அவசியமானதாக நான் பார்க்கிறேன்.

கேள்வி : ஜீவியின் கவிதைக்கு முன்னோடிகள் யார்?

ஜீவி : நமக்கு தொழில் கவிதை..நாட்டுக்கு உழைத்தல்: இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்று வறுமையை தின்று உள்ளுக்குள் சுடர் வளர்த்த பாரதி தான் என் முதல் ஆதர்சம். உழைக்கும் மக்களை உன்னத வாழ்க்கைக்கு அழைத்த பட்டுக்கோட்டையின் பாட்டு வரிகள் எனது விழிகளை விரிய வைத்தன. அதனைத் தொடர்ந்து வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மீரா, இன்குலாப், தணிகைசெல்வன், கந்தர்வன் என நீண்ட பட்டியலில் இருக்கும் பலரின் வரிகளும் என்னைப் பக்குவப்படுத்தின.

கேள்வி : ஏழை கவிஞனின் படைப்பு வெளிவருவதில் ஏற்பட்ட சிக்கல் ஏதாவது..

ஜீவி : உழைப்பாளிகளுக்காகவே தான் எழுதிய புரட்சிப் பாடல்களை மக்களிடம் கொண்டு செல்ல பாட்டு புத்தகமாக அச்சிட்டு அதை திருவிழாக்களில் விற்று தன் பாட்டுப் பயணத்தை தொடங்கியவர் பட்டுக்கோட்டை. ஒரு முறை அந்த புத்தகங்களை அச்சகத்தில் இருந்து வாங்க காசில்லை. கெஞ்சிப் பார்த்தார். அச்சகத்தார் கொடுக்கவில்லை. அந்த நேரம் அங்கு வந்த தோழர். மாசிலாமணி அந்த புத்தகத்தையும் அதைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு நிற்கும் இளைஞனையும் பார்த்து அச்சகத்தில் ஜாமின் கொடுத்து புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார். அதன் பிறகு தான் அந்த பட்டுக்கோட்டை சினிமாவில் பாட்டுக் கோட்டை கட்டினார். இதே போல எத்தனையோ சோதணைகளை கடந்தவர்கள்தான் கவிஞர்கள். பல நல்ல கவிஞர்கள் சாலையோரம் கிடக்கும் துண்டு காகிதத்தில் எழுதிக்கொண்டு ஒரு விடியலுக்காக ஏங்கியபடி இருக்கிறர்கள். அவர்களின் வைர வைரிகள் அச்சசேர முடியவில்லை என்கிற சோகம் தொடர்கிறது.

கேள்வி : உங்கள் படைப்புகள் சாதாரண மக்களையும் சென்றடைந்துவிட்டதா?

ஜீவி : அதிக வாசக பரப்பை எட்டும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கவிதை ரசிகர்கள் பல அடுக்குகளில் இருக்கிறார்கள். எனது கவிதைகள் வெகுஜன ரசிகர்களுக்கானவை..

‘ ஒரு ரயில் எஞ்சினாய்
எப்போதும் இயங்கு
கூடவே பலரைச் சேர்த்துக் கொண்டு,
ஊற்சாகமாகக் கூவிக்கொண்டு’
;ஏறிடு நண்பனே
ஓரிரு படிகள்தான் உச்சிக்கு..’

போன்ற என் வரிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அறிவொளி இயக்கத்திற்காக நான் எழுதிய குறிஞ்சி மலைத் தேனே..! என்ற தாலாட்டுப்பாடல் பட்டிதொட்டி எங்கும் பாமர மக்களிடமும் சென்றடைந்தது.

கேள்வி : கவிஞனுக்கு விருது கிடைக்கும் வரை தானா? அதன் பிறகு..

ஜீவி : எவரையோ பிடித்து உயரிய விருது வாங்கிக் கொள்வது, பின்னர் அதற்கான பாராட்டு விழாக்களில் கலந்து கொன்டே ஓய்ந்து போவது.. என்று இலக்கிய பணிகளை வகைப்படுத்தி வைத்திருக்கும் சிலரிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. மக்களிடமிருந்து கற்றுக் கொள்வோம். மக்களுக்கு கற்றுக் கொடுப்போம் என்று இலக்கியமாகவும், இயக்கமாகவும் திரியும் எங்களுக்கு மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தான் உன்னதமான பரிசு.

சந்திப்பு : இரா.பகத்சிங்.