கவிஞர் ஜீவி Kavignar Geevee

வினையும் எதிர்வினையும்

ஒரு துளி விரி
பெருங்கடல் வரும்

இருள் கொஞ்சம் சகி
முடிவில் புது விடியல்

தமிழ் தினம் துதி
தலைமுறைக்கே நிதி

வேர்வைகள் விதை
வெற்றிகள் குவி

மரம் செடி நடு
மழை குறி அறி

பறையிசை ருசி
பரவசம் உணர்

பல கவி படி
பார்வையில் ஒளி

தீத்துண்டு எடு
தீமை மேல் விடு

மனிதனை மதி
மதிப்புறும் நொடி

கரம் பற்ற பழகு
வரமாகும் வாழ்வு

சொற்காசுகள்

அம்மவாசையன்றே
ஆரம்பித்து விடுகிறது பௌர்ணமி
தாமதமாய் கண்டுகொள்கிறாய் நீ
…………………
நனையத்தான் மழை
நாணிலமே நனை
…………………
குடை மறந்த நாளின் மழை
உணர்த்திற்று
குடையோடு வந்த
நாட்களின் பிழை
…………………
மழையில் கரைகிறது வானவில்
மண்ணில் புதைந்து கிடக்கிறது பொன்
சிபாரிசுகளுக்குள்
தொலைந்து போகிறது திறமை
…………………
சத்தமாய் கவிதை சொல்லிக் கொண்டிருந்தேன்
பித்தன் என்றார்கள்
…………………
பூக்கள் தூவி
வாழ்த்தியது மரம்
கவுரவ கொலை செய்ய
காதலர்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள்
மனிதர்கள்
…………………
தலை கொழுத்த தீக்குச்சி
வற்றியதோர் வத்திப் பெட்டி
உரசும் நொடியில்
உண்டாகும் தீ
…………………

நில் கவனி செல்

அது உன் வாகனம் தானே

ஏன் எமனின் வாகனம் போல் இயக்குகிறாய்?

வரிசையில் நிற்கும் வண்டிகள் தாண்டி

இண்டு இடுக்குகளில் முண்டியடித்து

சாகச பயணம் செய்யத் துடிக்கிறாய்.

அது சாக பயணமாய் ஆவது நன்றா?

எதிர்வரும் வண்டிகள் குறித்து கவலையில்லை

திரும்பும் திசை குறித்து தெளிவில்லை

விதிகளெல்லாம் மீறுவதற்கென்றே

விளங்கிக் கொள்கிறாய்

தெரிந்து கொள்

விபத்துக்கு ஒரு விண்ணப்பம் போடுகிறாய்

குடித்துவிட்டு வண்டி ஓட்டி

இடித்துவிட்டு வீழிக்கிறாய்

செல் பேசியபடி செல்கிறாய்

இன்கம்மிங் இலவசமாய் இருக்கலாம்

அவுட்கோயிங்கிற்கு அவசரம் ஏன்?

சாலை பயணம் முக்கியம் தான்

அதை விட முக்கியம் நாளைய பயணம்

எதிலும் அவசரம் தவிர்

வாழ்க்கை ஒரு தேநீர் கோப்பை

ஒவ்வொரு சொட்டாய் உறிஞ்சி ரசி

ஒரு கதை தெரியுமா?

கண்ணதாசன் ஒரு முறை

மலேசியா போனார்

இலக்கிய கூட்டத்திற்கு நேரமாகிவிட்டதென

இயக்கிய டிரைவர் விரைந்து பறந்தார்

சிரித்தப்படியே கவிஞர் சொன்னார்

இந்த கூட்டத்திற்கு

பத்து நிமிடம் தாமதமாய் போகலாம்

ஆனால் பத்து வருடம் முன்போ போய் விடக்கூடாது

இனியேனும் விழி

சாலை விதிகள் மதி

வண்டி பயணம் மட்டுமல்ல

வாழ்க்கை பயணமும் சுகமாகட்டும்!

கடந்து போன கவிதை நதி

அடித்துப் பெய்கிற அடைமழைநாள். வீட்டிற்குள்ளும் வெளியிலும் கவிழ்ந்துகிடக்கும் இருட்டு.
மழைக்கு இடைவெளி கொடுத்த சிறுபொழுதில் வானில் ஒரு நொடி ஒளிக்கீற்று பரவும்.அப்போது அலுத்துச் சலித்த மனசுகளிடம் ஆனந்தம் தொற்றும். அப்படி ஒரு உற்சாகம் நா.கா-என அன்போடு அழைக்கப்பட்ட நா.காமராசன் கவிதைகளை முதலில் வாசிக்கும் எவரிடமும் தொற்றும்.
தமிழக் கவிதை தோட்டத்தில் புதுக்கவிதை பூக்கள் மலர்ந்து மனம் வீசத் தொடங்கிய 1970-களில் வித்தியாசமான நிறத்தையும் மணத்தையும் கொண்டு பூத்த கவிப்பூக்கள் நா.கா-யுடையது.

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனி மலடி தாழம் பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்
என்ற அவரின் வரிகள் அது வரை தமிழ்க் கவிதை பார்க்காத அரவானிகளைப் பற்றிய அவலத்தை சோகக்குரலில் சொன்னது.

1971-ல் நா.கா-வின் கறுப்பு மலர்கள் தொகுப்பு வெளிவந்து இலக்கிய உலகில் அவர்க்கு ஒரு நாற்காலியை தருவித்துத் தந்தது.
தலைப்புகள் தமிழ் மரபுக்கு புதியவை
கவிதைக்கான கருவும் புதுமையானதே
புதுமையின் தோற்றம் முதலில் குழப்பத்தைத் தரும்
படிக்கப் படிக்க மயக்கத்தைத் தரும்
மயக்க வைக்கும் சொற்சித்திரங்கள் இவை.
என கவியரசு கண்ணதாசன் கருப்பு மலர்களுக்கு தந்த அனிந்துரையில் குறிப்பிட்டுள்ளது உண்மைதான் என்பதை இவரது வரிகள் உணர்த்தும்.

செம்மண் பூமியில் கவி நடை லயங்கள்
ரோஜாப் பாதையில் விரக்தியின் முள்கள்
பூமியின் நாண வார்ப்புகள்.

போன்ற செம்மண் குறித்த சித்தரிப்பும்

இந்தியாவில்
கங்கை வற்றிப் போனாலும்
மது வெள்ளம் பாய்ந்து கொண்டு தான் இருக்கும்.
என்று குடிகாரன் கவிதைகளில் குறிப்பிட்ட சிந்தனை தெறிப்பும்
அந்த காலத்து கவிதை ரசிகர்களை கிறங்க அடித்தவை.

கறுப்பு மலர்களோடு சூரிய காந்தி, சகாராவை தாண்டாத ஒட்டகங்கள்,தாஜ்மஹாலும் ரொட்டி துண்டும் போன்ற தொகுப்புகளை அவர் தமிழுக்குத் தந்திருக்கிறார். இவற்றில் சூரிய காந்தி மரபு கவிதைகள். சகாராவை தாண்டாத ஒட்டகங்கள் வசன கவிதைகள்.
வால் முளைத்த மண்ணே
வசந்தத்தின் பச்சை முத்திரையே
உடல் மெலிந்த தாவரமே
என அவரது புல் கவிதை புதிய பார்வையில்
இயற்கைக்கு ஆரத்தி எடுத்தது என்றால்
நாங்கள் நிர்வானத்தை விற்பனை செய்கிறோம்
ஆடை வாங்குவதற்காக என்ற விலைமகளிர் குறித்த கவிதை
குறுவாளாகி சமூகத்தின் மனச்சான்றை குத்தி கிழித்தது
அதிர்ச்சியூட்டும் சமூக உண்மைகளை புதிய தொணியில் பேசும் கவிக்குரல் நா.கா-யுடையது.
புரட்சி இலக்கியம் என்பது பழமையை தகர்ப்பதை
மட்டும் கடமையாகக் கொண்ட வெறும் கலகக்காரர்
களின் கூடாரமல்ல. புதுமையை உருவாக்குகிற படைப்
பாளிகளின் பாசறையாகவும் அது செயல்படுகிறது.

முற்போக்கு படைப்புகளுக்கு வரையரை தந்ததோடு செயல்முறையாகவும் அதைச்செய்து காட்டியவர் நா.கா. திராவிட இயக்கம், சோசலிச சித்தாந்தம், அழகியல் ஆராதனை ஆகியவற்றின் கலவையாக மலர்ந்தவை அவரது கவிதைகள். கடைசி காலங்களில் மௌனத்தையே தனது கவிதையாக எழுதியவர் எனினும் தெரு ஓரத்து மனிதர்களின் பிரதிநிதியாக தன்னை வரித்துக்கொண்டு மயக்கும் வரிகளை எழுதியவர் நா.கா.
உங்கள் புல்லாங்குழல்களை
மெதுவாக ஊதுங்கள் – அவை
குயில்களின் தூக்கத்தை கெடுத்துவிட வேண்டாம் என்ற
நா.கா. மயிலிறகு மனசுக்காரர்.
தேவதேவி என்ற தம் பிரிய தேவதையை பல்வெறு கவிதைகளில் வசிகர
வார்த்தைகளால் வரைந்து காட்டியவர்.
கறுப்பு மோதிரங்கள் சுருண்டு இருக்கும் முடியழகு போன்ற வர்ணனைகள் மூலம் இளைஞர்களை புதுக்கவிதை ரசிகர்களாய் ரசவாதம் செய்தவை நா.கா-வின் சொல் ஓவியங்கள்.
பன்னீர் மரங்களே
மண்ணில் முளைத்த  நட்சத்திர மேடைகளே
மௌனக் கவிதைகளே
சொர்க்கம் தந்த உங்களின் சிறிய நாதஸ்வரப் பூக்களை
அங்கே ஊதியவள் ஊர்வசியோ

என்று பன்னீர் பூக்களை படம் பிடித்தவர்.
எதிர்ப்பை சாட்டையாக்கிப்
பம்பரமாயச்; சுழன்ற
எங்கள் தோழர்களை நான் வாழ்த்துகிறேன்
என்று இலட்சியப் பயனத்திற்கு வரிசைகட்டி நிற்கும்
சலியாத கால்களுக்கு சலங்கை கட்டியவர்

எல்லையற்ற சிருஷ்டி தாகம் நமக்குள்ளே இருந்து குமுறுகிறது. என்ற வேட்கையோடு புதிய ஒளிச்சொற்களை கவிதையாய் தந்த நா.காமராசன் பாமர ரசிகர்களுக்கு திரைப்பாடல்கள் மூலம் இலக்கியப்பந்தி வைத்தவர்.
போய் வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர்கொண்டு வா
என்றும்
சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு
சிறகு முளைத்தது என்றும் கவிதை மணக்கும் வரிகளை எழுதி கவிதைக்கும் திரைப்பாடலுக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்க முயற்சித்தவர்.
பகுத்தறிவு சோசலிசம் என்ற அடிப்படை இலட்சியங்கள் எனக்குண்டு அவற்றை கலா போதையோடு பாடுவேன் என்று உரத்த குரலில் உலகுக்கு சொன்னவர்
எல்லாம் முடிந்து விட்டது
இந்த மண்ணில்
இனி நான் நேசிப்பதற்கு
ஆஸ்துமா மாத்திரைகளை தவிர
வேறு என்ன இருக்கிறது

என நா.கா சில நேரங்களில் விரக்திக் குரலை வெளிப்படுத்தியிருந்தாலும் அவர்களுக்கும் ஒருநாள் காலம்வரும்

ஒரு நாள் அந்த ஒட்டகங்களும் சகாராவை தாண்டும் என்று நம்பிக்கையின் நாதமும் அவரிடமும் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. முரன்களின் பூமியில் முளைக்கும் பூச்செடிதான் கவிஞன் அத்தைகைய அபூர்வ பூச்செடியான நா.கா-வின் கறுப்பு மலர்கள் தொகுப்பு புதுக்கவிதைக்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்க காரணமானது மறுக்க முடியாத உண்மை தமிழின் வழமையான வார்த்தை பெட்டியை மூடி வைத்துவிட்டு மயக்கும் சொற்செட்டுகளால் கவிதை நெய்தவர் காமராசர்.

மின்னலென தெறிக்கிற வரிகளும் இடியென முழங்கும் சமூக தெறிப்பும் கொண்டு அடித்து பெய்து ஓய்ந்த மழை நா.கா. கவிதா ரசிகர்களின் மனப்பிரதேசங்களில் அவரின் கவி வரிகள் ஊறியபடியே இருக்கும். எனது பெயர் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக நான் எழுதுவதில்லை. தமிழின் பெயர் உலக இலக்கியத்தில் இடம் பெறுவதற்காகத் தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று ஞானச்செருக்கோடு பேசியவர்.

மசானத்து தீ கூட
தபால் பெட்டி நிறம் இருக்கும்

ஜனங்களெல்லாம் கடுதாசி
ஜனன மரணம் தபால்காரர்
என்று ஒரு கவிதையில் நா.கா. சொல்கிறார். அதை வழிமொழியெலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

சாதனைத் திருநாள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநீதி
என்று அழுத்தி சொன்ன ஒரு தேதி !
எட்டு வைத்து எட்டு வைத்து
எழுச்சி கொண்ட பெண்ணினம்
தனக்கான வானத்தை தொட்டுவிட்ட எற தினம் !
உழைக்கும் மகளிரின்
உரிமைச் சங்கு !
அடிமை இருட்டை விரட்டிய கங்கு !
செங்கல் சூளையில் வேலை பார்த்தாலும்
ஏசி ஐ .டி யில் வேலை பார்த்தாலும்
கடைசி வரிசையில்தான் பெண்கள்
என்பதை மாற்றிட வந்த மைல் கல் !
சீலிங் ஃபேன்
ஏர் கூலர்
ஸ்ப்ளிட் ஏசி
எத்தனையோ மாற்றம் இங்குவந்தாலும்
பெண்களின் மனவெக்கை மட்டும் மாறவே
இல்லை !
அழுவதும் தொழுவதும் ஒரு காலம்
அடிமையாய்க் கடந்தது ஒரு காலம்
ஆணுக்கு பெண் நிகர் என்றே
எழுந்து நடப்பது வருங்காலம் ;
மார்ச் என்றாலும்
எட்டு என்றாலும்
நடப்பதை குறிக்கும்
மார்ச் 8 ம் பெண்கள் முன்னேற்றப்பாதையில்
நடப்பதைக் குறிக்கும் .

வாக்களி தமிழா வாக்களி

ஜனநாயக திருவிழாவில்
பங்களி
வாக்கிங் போனால்
தேகத்திற்கு நல்லது
வாக்களிக்க போனால்
தேசத்திற்கு நல்லது
ஜனநாயகம் தந்ந
உரிமை உன் ஓட்டு
அதை மதித்து
நீ நடந்து காட்டு
உனக்கு தெரியுமா
ஒரு உண்மை
சுதந்திரத்திற்கு முன்பு
எல்லோருக்கும் வாக்குரிமை இல்லை
சில நாடுகளில்
பல ஆண்டுகள்
பெண்களுக்கு வாக்குரிமை இல்லை
நம் மக்களாட்சியின் அற்புதம்
அனைவருக்கும் வாக்குரிமை
ஆகவே போய் வைத்துக்கொள்
ஆட்காட்டி விரலில்
ஒரு மை
பணம் பெற்று வாக்களித்தால்
நீ விற்கிறாய்
மனசாட்சிபடி வாக்களித்தால்
நீ நிற்கிறாய்
ஆகவே தமிழா
பதினாறில் வாக்களித்து
பெருவாழ்வு வாழ்க!